உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்றபெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்ததுஎட்டாவது
கறைக்கண்டன் சருக்கம்
காரிநாயனார் புராணம்
திருக்கடவூர் வருமுரவோர் காரி யாராந்
திகழ்தொண்டர் வண்டமிழ்நூ றிருந்த வோதி
விருப்பொடுதம் பெயராற்பா விளம்பி மும்மை
வேந்தரையு முறைமுறையே மேவி யங்க
ணுரைத்தவுரை நயமாக்கி யவர்பா லேய்ந்த
வொண்பொருளா லாலயங்க ளோங்கச் செய்து
தரைக்குளருந் தவர்க்கேவ றகமுன் போற்றுந்
தன்மையா லருள்சேர்ந்த நன்மை யாரே.
திருக்கடவூரிலே, தமிழ்மொழியிலே மிகவல்ல காரி நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சொல்விளங்கப் பொருண் மறைந்து கிடக்கும்படி தம்பெயரினாலே தமிழ்க் கோவை பாடி, தமிழ்நாட்டு மூவேந்தரிடத்துஞ்சென்று, அவர்கள் மகிழும்படி அதற்குப் பொருள் விளங்கச் சொல்லி அவர்களிடத்திற்பெற்ற திரவியங்களைக்கொண்டு, சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுவித்தும், சிவனடியார்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுத்து, அவர்களிடத்திற்பெற்ற திரவியங்களைக் கொடுத்தும், திருக்கைலாசமலையை மறவாத கருத்தினராகி, உலகமெங்குந் தம்முடைய சிவகீர்த்தியை நிறுத்தி, பரமசிவனது திருவருளைப் பெற்று, மனம்போல உடம்புந் திருக்கைலாசமலையை அடையப்பெற்றார்.
திருச்சிற்றம்பலம்