சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்ற

பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது

ஒன்பதாவது
கடல்சூழ்ந்த சருக்கம்

கோட்புலிநாயனார் புராணம்

குலவுபுகழ் நாட்டியத்தான் குடிவே ளாளர்
    கோட்புலியார் குவித்துயர்த்த செந்நெற் கூடு
நிலவணிவார்க் கமைத்தாணை நிறுத்தி யொன்னார்
    நேர்மலைவார் திருவாணை நினையா தேநெற்
சிலமிடியா லழித்தபடி யறிந்து வாளாற்
    சேர்ந்தபெருங் கிளைஞருடல் சிதற வீசி
யிலகுமொரு குழவியையு மெறிந்து நாத
    னெண்ணரிய கருணைநிழ லெய்தி னாரே.

    சோழநாட்டிலே, நாட்டியத்தான்குடியிலே, வேளாளர் குலத்திலே சிவபத்தியிற் சிறந்த கோட்புலிநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார்.  அவர் அரசனிடத்திலே சேனாதிபதித் தொழில் பூண்டு, அதனாலே தமக்குக் கிடைக்கும் வேதனத்தைக்கொண்டு சிவாலயங்களுக்குத் திருவமுதின் பொருட்டு நெல்லுவாங்கிக் கட்டுதலாகிய திருப்பணியை நெடுங்காலஞ் செய்து வந்தார்.

    இப்படியொழுகுநாளிலே, அரசனது ஏவலினால் போர்முனையிற் செல்லவேண்டி, சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டுத் தாந்திரும்பி வரும் வரைக்கும் வேண்டும் நெல்லைக்கட்டி, தம்முடைய சுற்றத்தார்களெல்லாருக்குந் தனித்தனியே அதில் எடுத்துச் செலவழியாதிருக்கும்படி ஆணையிட்டுக் கொண்டு போருக்குப் போயினார்.  சிலநாளிலே பஞ்சம் வந்தமையால் அந்தச்சுற்றத்தார்கள் "நாங்கள் உணவின்றி இறப்பதினுஞ் சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டுக் கட்டப்பட்ட இந்நெல்லைக் கொண்டாயினும் பிழைத்து, பின் கொடுத்துவிடுவோம்" என்று நெல்லைக் கூடுகுலைத்து எடுத்துச் செலவழித்தார்கள், கோட்புலிநாயனார் அரசனுடைய பகைஞரைப் போர்முனையிலே வென்று அவனிடத்திலே நிதிக்குவை பெற்றுக்கொண்டு, தம்முடைய ஊரை அடைந்து, தம்முடைய சுற்றத்தார்கள் அதிபாதகஞ்செய்தமையை உணர்ந்து, ஒன்று செய்யத் துணிந்து, தம்முடைய வீட்டிலே பகுந்து, அவர்களெல்லாரையும் அழைப்பித்து, தமது கோட்புலியென்னும் பெயரையுடைய காவலாளன் கடை காக்க, சிவதிரவியத்தை எடுத்துச் செலவழித்த அதிபாதகர்களாகிய தந்தை, தாய், உடன்பிறந்தார், மனைவி முதலிய சுற்றத்தா ரெல்லாரையும் பணிவிடைக்காரரையும் வாளினாலே துணிந்தார்.  அப்பொழுது காவலாளன் அங்கே பிழைத்த ஒரு ஆண்பிள்ளையைப் பார்த்து, "இக்குழந்தை அவ்வன்னத்தை உண்டதன்று.  இது இக்குடிக்கு ஒரு பிள்ளை; இதனைக் கொல்லா தருள் செய்யும்" என்று வேண்ட; கோட்புலிநாயனார் "இது இந்நெல் உண்டவளுடைய முலைப் பாலை உண்டது" என்று அதை எடுத்து எறிந்து, வாளினாலே துணிந்தார்.  உடனே சிவபெருமான் கோட்புலிநாயனாருக்குத் தோன்றி, " அன்பனே! உன் கைவாளினாலே தங்கள் பாவத்தினின்றும் நீங்கிய உன் சுற்றத்தார்கள் சுவர்க்கத்தை அடைய நீ இந்தப்படியே நம்முடன் வருவாய்" என்று கருணை செய்து எழுந்தருளினார்.

திருச்சிற்றம்பலம்

கடல்சூழ்ந்த சருக்கம் முற்றுப்பெற்றது