உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்ற

பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது

ஏழாவது
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்

சத்திநாயனார் புராணம்

விரிதருகா விரிநாட்டு வரிஞ்சை யூர்வாழ்
    வேளாளர் சத்தியார் விமலர் பாதத்
துரியவர்க ளடிபரவு மொருமை யார்நா
    வோவாமே யைந்தெழுத்து முரைக்கு நீரா
ரிருளின்மிட றுடையபிரா னடியார் தம்மை
    யிகழ்வார்நாத் தண்டாயத் திடுக்கி வாங்கி
யரியுமது திருத்தொழிலா வுடையார் மன்று
    ளாடியசே வடிநீழ லடைந்து ளாரே.

    சோழநாட்டிலே, வரிஞ்சியூரிலே, வேளாளர் குலத்திலே, சத்திநாயனாரென்பவரொருவர் இருந்தார்.  அவர் பரமசிவனுடைய திருவடித்தாமரைகளைச் சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்பவர்.  அவர் சிவனடியார்களை இகழ்ந்து பேசும் அதிபாதகிகளுடைய நாக்கைத் தண்டாயத்தால் இடுக்கித் தமது கையிற் கத்தியினால் அரிதலாகிய அருமை பெருமைத் திருத்தொண்டை, நெடுங்காலம் அன்பினோடு செய்துகொண்டிருந்து, பரமசிவனுடைய திருவடி நிழலை அடைந்தார்.

 

திருச்சிற்றம்பலம்.